உங்கள் அதிர்ஷ்ட நேரம்

Monday, July 12, 2010

செபி - பங்கு சந்தைகளைக் கண்காணிக்கும் நிறுவனம்.

பொதுமக்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்காக முகவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வர்த்தகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான் இன்று உலகிலுள்ள பங்குச் சந்தைகள்.

பங்குச் சந்தை - அன்றாடம் மில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இடம். ஆரம்ப காலத்தில் அங்கு நிறையத் தவறுகள் நடந்தன. அதையடுத்து விழித்துக் கொண்ட உலக நாடுகள் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளைத் தோற்றுவித்தன.

முகவர்களாலேயே பங்குச் சந்தை நடத்தப்ட்ட போது அதன் நம்பகத் தன்மை பற்றிய கேள்வி எழுந்தது. தவறுகள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

அதனடிப்படையில் ஒவ்வொரு நாடும் தனது பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்கின.

பங்குச் சந்தைகளை எப்படி நடத்தலாம் என்ற விதிமுறைகளை வகுத்தது அரசாங்கம். அதன்பிறகு பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு தனி நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டதுதான் செபி - SEBI ( Security and
Exchange Board Of India.) என்ற அமைப்பு. இதன் கண்காணிப்பில்தான் நம் நாட்டின் பங்கு சந்தைகள் இயங்குகின்றன.

இப்படி ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்கமும் தங்கள் வசதிக்கேற்ற அமைப்புகளை உருவாக்கி தங்கள் நாட்டின் சந்தைகளில் தவறுகள் நடக்காத வாறு கண்காணித்து வருகின்றன.

அரசாங்கம் சார்ந்த இந்தக் கண்காணிப்பு அமைப்புகளால் பொதுமக்களுக்கு என்ன பயன்-

பங்கு வர்த்தகத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் சார்ந்த அமைப்புகள் கண்காணிக்கும் போது அங்கு தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடிகிறது. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் வந்த பிறகு தான் செயல்வடிவம் பெற்றது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடைய நிறுவனத்தைப்பற்றி சொல்வது அனைத்தும் எக்ஸ்சேன்ஜில் இருக்கும்.  அவங்களுடைய இணையப் பக்கத்தைத் திறந்து பார்த்தால்
அதில் நிறுவனங்களின்ஆண்டறிக்கையை (Annual Report)  நாம இலவசமாகவே படித்துப் பார்க்க முடியும். அதனால பொதுமக்கள் ஒரு நிறுவனத்தைப் பற்றிய(அந்நிறுவனம் லாபத்தில் நடக்கிறதா அல்லது நஷ்டத்தில் நடக்கிறதா) உண்மை நிலையை நன்கு அறிந்து கொள்ளமுடியும். இதன்மூலம் மக்கள் நம்பிக்கையான நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்ய முடியும்.



பங்கு வர்த்தகம் பற்றிய கண்காணிப்பு அமைப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அங்கு தவறுகள் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வபோது சிற்சில இடங்களில் தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனைகளும் கடுமையாக இருக்கின்றன.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் நம்மில் தற்பொழுது அதிகரித்து வருகிறது. எனவே, பங்குசந்தையில் முதலீடு செய்யும்முன்  அது பற்றிய சாதக, பாதகங்ளைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது நமக்கு நஷ்டம் வராமல் காக்கும்.

Friday, July 2, 2010

பங்குச் சந்தைகள்:

பங்குச் சந்தைகள்:

பங்கு வர்த்தகம் மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. அண்மைக்கால தொழில் நுட்ப வளர்ச்சி பங்கு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் தனித்தனி நிறுவனங்களால் நடத்தப்பட்ட பங்கு வர்த்தகம் தேவையின் பொருட்டு ஒரே இடத்தில் நடத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த நிலையில் தொடங்கப்பட்டவை தான் பங்குச் சந்தைகள்.

நல்ல பங்குகள் விற்பனைக்கு வருகிறது. நாம் அவற்றை நம் தேவைக்கேற்ப வாங்கி வைத்திருக்கிறோம்.

சில நாட்களுக்குப் பிறகு அவற்றின் விலை ஏறுகிறது அல்லது நமக்குப் பணத் தேவை வருகிறது.

அதை நாம் விற்கவேண்டும். நாம் வாங்கியது போல் அவற்றை நம்மிடம் இருந்து வாங்க ஒருவர் தேவை. இல்லையென்றால் விற்பனை செய்வது கஷ்டம். அதனால் விற்பவரையும் வாங்குபவரையும் இணைக்கத் தொடங்கப்பட்டதுதான் பங்குச்சந்தை.

தொடக்க காலத்தில், ஒரு நிறுவனத்தின் பங்குகளை எங்கே வாங்குவது? எப்படி வாங்குவது?

அதற்கென முகவர்கள் இருக்கிறார்களா?  தங்கள் முதலீட்டுக்கு என்ன
உத்தரவாதம்?

 இது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடம் எழுந்தன. அதனால் முகவர்களின் தேவை ஏற்பட்டது.

அதாவது வாங்குகிறவங்களுக்கும், விற்பவர்களுக்கும் இடையில் பாலமாக வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அப்பொழுது பாலமாக செயல்பட்டவர்கள்தான் தற்பொழுது பங்கு தரகர்கள் அல்லது முகவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.  அதில் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்ள ஏற்பட்ட காலதாமதங்களால் எல்லாத் தரகர்களும் சேர்ந்து நாம் ஒரே இடத்தில் வைத்து பரிவர்த்தனை செய்யலாம் என்று முடிவு செய்து ஒரு பொது இடத்துக்கு வந்தார்கள். அது தான் தற்பொழுது பங்குச் சந்தை என அழைக்கப்படுகிறது.

தற்சமயம் உலகம் முழுக்க 70-க்கும் மேற்பட்ட பங்குச் சந்தைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பங்குப் பரிவர்த்தனையைச் செய்வதற்காகத்தான் பங்குச் சந்தையை ஆரம்பித்தார்கள்.

பங்குச் சந்தையை முதலில் ஆரம்பித்தது ஹாலந்து ஆகும்.

Thursday, July 1, 2010

பங்கு என்றால் என்ன?

ஒவ்வொரு நாளும் பங்கு சந்தை பற்றி நம் செவிகளில் விழும் செய்திகள் ஏராளம். 
அவற்றைப் பற்றி நம் மனத்தில் எழும் சந்தேகங்களும் தாரளம். 


BSE., NSE.,Sensex, Nifty, Share,  இவ்வாறு பல அர்த்தம் புரியாத வர்த்தைகளை நாம் செய்திகளில் கேட்டிருக்கலாம். அவை என்ன? எவற்றைக் குறிக்கிறது?  இது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுவது சகஜம். 


அண்மைய காலத்தில் பங்குச் சந்தை பற்றிய ஆர்வம் பலரிடம் எழுந்திருக்கிறது. 


ஆனால்நம்மில் எத்தனை பேர் பங்கு வர்த்தகம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம்? 


எப்படியாவது இந்தப் பங்குகள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உண்டு. ஆனால் எங்கு? எப்படித் தெரிந்து கொள்வது.


வாருங்கள்,  உங்களை போன்ற புதியவர்களுக்காகவே இந்த பக்கங்கள் - பங்கு சந்தையைப் பற்றி சுலபமாக நீங்கள் புரிந்து கொள்ள என்னால் ஆன ஒரு சிறிய முயற்சி.


பங்கு வர்த்தகம் - ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும் முக்கியக் காரணி. 


அதன் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மில்லியன் 
கணக்கில் சம்பாதிக்க இயலும். அது பற்றி முறையாகத் தெரியாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கையில் உள்ளதையும் இழந்து கடுமையான பாதிப்புகளை அடையநேரும்


ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அகலக்கால் வைக்காமல் சிறிதாகத் தான் தொடங்குவோம். நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக நாம் 
முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை ஏற்படும்போது... 


அப்பொழுது நாம் பணத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கியாகவேண்டும். அதைக் கடனாக வாங்கினால் அதிக வட்டி கொடுக்க வேண்டிவரும். அதற்குபதிலா நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தந்தால், அதுதான் ஷேர் அல்லது பங்கு. 


நான் லாபத்தில் உங்களுக்குப் பங்கு கொடுக்கிறேன். நீங்களெல்லாம் பங்கு கொடுங்க அப்படின்னு பொதுமக்களிடம் நேராகக் கேட்பது. பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி அந்தப் பணத்தை வைச்சு நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விரிவு பண்ணி மொத்த லாபம் என்ன வருதோ அதை 
முதலீட்டாளர்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கிறது தான் பங்கு (SHARE)  எனப்படும்.


ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம் முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன.


ஆக பங்கு என்றால் என்ன என்பது புரிந்து விட்டது.