1. தினசரி வர்த்தகம் (Day trading or Intra day )
2. நீண்ட கால முதலீடு ( Investment or Long term )
நாம் முதலில் தினசரி வர்த்தகத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
தினசரி வர்த்தகம் ( day trading ) என்பது பங்குகளை வாங்குவதும் விற்பதும் ஒரே நாளுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். அன்றைய தினம் மார்க்கெட் முடியும் பொழுது நமது கையில் எந்தப் பங்கும் இருக்கக்கூடாது. மார்க்கெட் முடியும் நேரத்திற்குள் கையிலிருக்கும் பங்குகளை விற்றுவிட வேண்டும் . ஆங்கிலத்தில் square off செய்து விடுவது என்று சொல்வார்கள்.
தினசரி வர்த்தகத்தில் இரு வகை உண்டு
லாங் ட்ரேடிங் ( Long Trading )
ஷார்ட் ட்ரேடிங் ( Short Selling )
லாங் ட்ரேடிங் ( Long Trading ) என்பது பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி பங்கின் விலை அதிகமானவுடன் விற்பது. இவ்வகை ட்ரேடிங் பொதுவாக மார்க்கெட் புள்ளிகள்(சென்செக்ஸ்) உயர்ந்து கொண்டிருக்கும் பொழுது, குறிப்பிட்ட பங்கின் விலையும் உயரும் என்று நமக்கு உறுதியாக தெரியும்பொழுது செய்யலாம்.
ஷார்ட் ட்ரேடிங் ( Short Selling ) என்பது பங்குகளை உயர்ந்த விலையில் விற்றுவிட்டு- நம்மிடம் பங்களே இல்லாத போதும்- பங்கின் விலை குறைந்தவுடன் வாங்கிவிடுவது . இவ்வகை ட்ரேடிங் பொதுவாக மார்க்கெட் புள்ளிகள் சரிந்து கொண்டிருக்கும் பொழுது குறிப்பிட்ட பங்கின் விலையும் சரியும் என்று நமக்கு உறுதியாகதெரியும் பொழுதும் செய்யலாம்.
லாங் ட்ரடிங் பண்ணும் பொழுது நமக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் பங்குகளின் விலை இருந்தால், அதாவது நாம் உயரும் என்று நினைத்து வங்கிய பங்கின் விலை குறைந்து விட்டால் நாம் அப்பங்குகளை அடுத்த நாட்களுக்கு நமது கணக்கில் தேவையான பணம் இருந்தால் டெலிவரி எடுத்துக்கொள்ளலாம்.
இப்பொழுது இது நீண்ட கால முதலீடு ஆகிவிடும். இது இரு நாட்களில் இருந்து சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் வரை கூட இருக்கலாம்.
இந்த பங்கை எப்பொழுது விற்பது என்பதை பங்கின் விலை ஏற்றம், நமது பணத்தேவை அல்லது நாம் முடிவுசெய்துள்ள லாபத்தை பங்கு அடைந்து
விட்டது என்பன போன்ற பல காரணங்களை ஆராய்ந்து நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் டே ட்ரேடிங்-ல் வாங்கிய பங்குகளை முதலீட்டுப் பங்குகளாக மாற்றாமல் இருக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான விதி.
டே ட்ரேடிங் மிகவும் அபாயமானது புதிதாக சந்தையில் நுழைபவர்களுக்கு ஏற்றதல்ல. முதலீடு அனைத்தும் கரைந்து போக வாய்ப்புள்ளது. ஆனாலும் எங்கு அபாயம் அதிகமோ அங்குதான் லாபமும் அதிகம்.
டே ட்ரேடிங் இல் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்:
மார்க்கெட்டின் போக்கை கவனித்து மார்க்கெட்டின் போக்கிலேயே( Market trend ) செயல்பட வேண்டும்.
வாங்கும் விலை ( Entry price ) விற்கும் விலை ( Exit price ) மிகவும் முக்கியம்.
பங்கு மிகக் குறுகிய காலமே நம் கையிலிருக்க வேண்டும்.
வாங்கப்போகும் பங்கை உன்னிப்பாக கவனித்து வரவேண்டும்.
அதிக எண்ணிக்கையில் விற்கும் ( volume ) பங்குகளே டே ட்ரேடிங்-ற்கு ஏற்றது. ஏனென்றல் விற்க்கும்பொழுது விரைவாக விற்றுவிடமுடியும்.
நாம் முடிவு செய்த விலைக்கு அருகில் பங்கின் விலை வந்தவுடன் விரைவாக விற்று லாபத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
மிகவும்முக்கியம் லாபத்திலிருந்து நஷ்டத்திற்கு பங்கின் விலை சென்று விடக் கூடாது.
ஒரே பங்கில் (Single trade ) அதிக லாபம் எதிர்பார்க்கக் கூடாது.
ஸ்டாப் லாஸ் ( Stop loss ) டே ட்ரேடிங்-ன் உயிர். மிக மிக அவசியம்.
ஒரே பங்கில் ( Single trade ) மொத்த முதலீட்டையும் செய்ய கூடாது.
நஷ்டம் வரும் பொழுது பதட்ட பட வேண்டியதில்லை.
மார்க்கெட்டில் நிறைய அனுபவமுள்ளவர்கள், அவர்கள் வாங்கும் எல்லா பங்குகளிலும் லாபம் சம்பாதிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடுத்து பங்கு சந்தையில் நீண்டகால முதலீடு ( Long Term ) பற்றி தெரிந்து கொள்வொம்.
பங்கு சந்தையில் பெரும் லாபம் ஈட்டியவர்கள் எல்லாம் தங்கள் பணத்தை பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு செய்தே அதைச்சாதித்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த முறையில் நாம் வாங்கும் பங்குகளை நான்கு நாட்கள் முதல் பல வருடங்கள்வரை நாம் வைத்துக்கொள்ளமுடியும். இந்த முதலீட்டை நாம் பல
காரணங்களுக்காக நீட்டிக்கொண்டே போகலாம். இதனால் நமது பங்குகளின் மதிப்பு இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கூட உயர வாய்ப்புள்ளது.
நன்கு கவனிக்கவும் வாய்ப்புத்தான் உள்ளது. ஏனென்றால்பங்குச் சந்தையில் நமக்கு வங்கியை விட அதிக லாபம் கிடைக்கும் போலிருக்கிறதே என்று
நாம் நம்மிடம் உள்ள பணத்தை எல்லாம் இதில் முதலீடு செய்யக்கூடாது. சில பங்குகள் நமது முதலீட்டை இரு மடங்கு மும்மடங்கு ஆக்கும் ஆனால்
சில பங்குகள் நமது முதலீட்டையும் கரைத்துவிட்டு சந்தையை விட்டே ஓடி விடக் கூடிய அபாயமும் இருக்கிறது. இல்லாவிட்டால் பங்குகளில் முதலீடு செய்த அனைவருமே இன்று கோடிஸ்வரர்களாக வலம் வருவார்கள். சில நேரங்களில் நாம் முதலீடு செய்யும் பங்குகள் நமக்கு லாபமும் கொடுக்கலாம் சில சமயம் நஷ்டமும் கொடுக்கலாம்.
அதனால் பங்கு சந்தையில் தொடர்ந்து லாபம் ஈட்ட நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்:
முதலில் நாம் தினசரி வர்த்தகம் பண்ணப்போகிறோமா அல்லது முதலீடு பண்ணப்போகிறோமா என்று தெளிவாக முடிவு செய்வது அவசியம்.
நாம் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கும் தொகையில் பாதியை மட்டுமே முதலில் முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால் சந்தை எப்பொழுதுமே
ஏறுமுகத்திலேயே இருக்காது. அவ்வப்போது இறங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும். இதை கரெக்சன் ( Correction ) என்பார்கள்.
நாம் வாங்கிய பங்கின் விலை சரிந்தால், இந்த பங்கு மறுபடியும் ஏறும் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால் நாம் மறுபடியும் சிறிது பங்குகளை அன்றைய குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள்லாம் இதை சந்தையின் வார்த்தைகளில் ஆவெரேஜ் (Average) செய்வது என்பார்கள்.
நமது முதலீடு அனைத்தையும் ஒரே பங்கில் முதலீடு செய்யாமல் பல பங்குகளில் சிறு முதலீடுகளாக வைத்திருப்பது நல்லது. அதற்காக 50 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால் நம்மால் அனைத்தையும் கவனிக்க முடியாது.
நமது முதலீடு அனைத்தையும் ஒரே துறையில்(SECTOR) முதலீடு செய்யாமல் வேறு வேறு துறைகளில் முதலீடு செய்ய வேண்டும்.
ஒரு துறையை எடுத்துக்கொண்டால் அந்தத் துறையில் வளர்ந்துவரும் நிறுவனங்களை உன்னிப்பாக கவனித்து முதலீடு செய்தால் நமது முதலீடும் வேகமாக வளரும்.
நாம் முதலீடு செய்ய நினைக்கும் பங்கின் விலை இப்பொழுது நாம் வாங்க நினைக்கும் விலையில் இல்லை என்றாலும் நாம் தொடர்ந்து அப்பங்கின் போக்கை தினமும் கவனித்து வந்தால் சந்தையில் விலைஇறக்கம் ஏற்படும்பொழுதுபங்கின் விலையும் குறையும் போதும் அதை வாங்கமுடியும்.
No comments:
Post a Comment